திருஞானசம்பந்தர் தேவாரம் |
இரண்டாம் திருமுறை |
2.35 திருக்குரங்காடுதுறை பண் - இந்தளம் |
பரவக் கெடும்வல் வினைபா ரிடஞ்சூழ
இரவிற் புறங்காட் டிடைநின் றெரியாடி
அரவச் சடையந் தணன்மேய அழகார்
குரவப் பொழில்சூழ் குரங்காடு துறையே.
|
1 |
விண்டார் புரமூன்று மெரித்த விமலன்
இண்டார் புறங்காட் டிடைநின் றெரியாடி
வண்டார் கருமென் குழல்மங்கை யொர்பாகங்
கொண்டான் நகர்போல் குரங்காடு துறையே.
|
2 |
நிறைவில் புறங்காட் டிடைநே ரிழையோடும்
இறைவில் லெரியான் மழுவேந்தி நின்றாடி
மறையின் னொலிவா னவர்தா னவரேத்துங்
குறைவில் லவனூர் குரங்காடு துறையே.
|
3 |
விழிக்குந் நுதல்மே லொருவெண் பிறைசூடித்
தெழிக்கும் புறங்காட் டிடைச்சேர்ந் தெரியாடிப்
பழிக்கும் பரிசே பலிதேர்ந் தவனூர்பொன்
கொழிக்கும் புனல்சூழ் குரங்காடு துறையே.
|
4 |
நீறார்தரு மேனியன் நெற்றியொர் கண்ணன்
ஏறார்கொடி யெம்மிறை யீண்டெரி யாடி
ஆறார்சடை யந்தணன் ஆயிழை யாளோர்
கூறான்நகர் போல்குரங் காடு துறையே.
|
5 |
நளிரும் மலர்க்கொண் றையுநாறு கரந்தைத்
துளிருஞ் சுலவிச் சுடுகாட் டெரியாடி
மிளிரும் மரவார்த் தவன்மே வியகோயில்
குளிரும் புனல்சூழ் குரங்காடு துறையே.
|
6 |
பழகும் வினைதீர்ப் பவன்பார்ப் பதியோடும்
முழவங் குழல்மொந்தை முழங் கெரியாடும்
அழகன் னயில்மூ விலைவேல் வலனேந்துங்
குழகன் நகர்போல் குரங்காடு துறையே.
|
7 |
வரையார்த் தெடுத்தவ் வரக்கன் வலியொல்க
நிரையார் விரலால் நெரித்திட் டவனூராங்
கரையார்ந் திழிகா விரிக்கோலக் கரைமேல்
குரையார் பொழில்சூழ் குரங்காடு துறையே.
|
8 |
நெடியா னொடுநான் முகனுந் நினைவொண்ணாப்
படியா கியபண் டங்கனின் றெரியாடி
செடியார் தலையேந் தியசெங்கண் வெள்ளேற்றின்
கொடியான் நகர்போல் குரங்காடு துறையே.
|
9 |
துவரா டையர்வே டமலாச் சமண்கையர்
கவர்வாய் மொழிகா தல்செய்யா தவனூராம்
நவையார் மணிபொன் னகில்சந் தனமுந்திக்
குவையார் கரைசேர் குரங்காடு துறையே.
|
10 |
நல்லார் பயில்கா ழியுள்ஞான சம்பந்தன்
கொல்லே றுடையான் குரங்காடு துறைமேல்
சொல்லார் தமிழ்மாலை பத்துந் தொழுதேத்த
வல்லா ரவர்வா னவரோ டுறைவாரே.
|
11 |
திருச்சிற்றம்பலம் |